search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடலூர் அருகே விபத்து"

    கடலூர் அருகே அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி 1 வயது குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    கடலூர்:

    கடலூரை அடுத்த உள்ளேரிபட்டு பகுதியை சேர்ந்தவர் கருணாகரன். (வயது 35). தொழிலாளி. இவருடைய மனைவி இலக்கியா (28). இவர்களுக்கு கார்த்திக் (3), நகுல்(1) ஆகிய 2 ஆண் குழந்தைகள் இருந்து வந்தனர்.

    இந்த நிலையில் கார்த்திக்கும், நகுலுக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இன்று காலை மோட்டார் சைக்கிளில் அவர்களை கருணாகரனும், அவரது மனைவியும் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் அவர்கள் தனது மகன்களை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு நெல்லிக்குப்பம் நோக்கி புறப்பட்டனர். கடலூர் அடுத்த கோண்டூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது சாலையின் ஓரத்தில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது.

    சாலையின் ஓரத்தில் சென்றுகொண்டிருந்த கருணாகரன் அந்த பள்ளத்தில் விழுந்து விடக்கூடாது என்பதற்காக திடீரென்று மோட்டார் சைக்கிளை பிரேக் அடித்து நிறுத்தினார்.

    இதில் தாய் இலக்கியா மடியில் வைத்திருந்த குழந்தை நகுல் எதிர்பாராமல் சாலையில் தவறி கீழே விழுந்தது. அப்போது பின்னால் வந்த அரசு பஸ் சக்கரம் நகுல் தலையில் எதிர்பாராமல் ஏறியது. இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே குழந்தை உயிரிழந்தது. இதனைப் பார்த்த தாய்-தந்தை இருவரும் தங்கள் கண் முன்னே பலியான குழந்தையை கையில் எடுத்து கொண்டு கதறி அழுதனர். இதைபார்த்த அங்கு திரண்டு இருந்த பொதுமக்களும் கண் கலங்கினார்கள்.

    இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர்.

    கடலூர் அடுத்த கோண்டூர் சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு இதை அறிவிக்க எந்தவித பேரிகார்டோ அல்லது எச்சரிக்கை பலகையோ அங்கு அதிகாரிகள் வைக்கவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அந்த இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டிருப்பது சரியாக தெரிவதில்லை. அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது.

    இன்று குழந்தை நகுல் பஸ் சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் நடந்துள்ளது. இதுபோன்ற விபத்துகள் நடப்பதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ×